நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது. சமீப காலமாக தமிழில் வரும் படங்கள் எல்லாம் இப்படித் தான் இருக்கின்றன – படம் பார்க்க வரும் ரசிகர்கள் எல்லாம் ஏதோ குற்றவாளிகள் போலவும், சமூக அக்கறையே இல்லாதவர்கள் போலவும் சித்தரித்து சில படங்கள், தமிழன்-மதச்சார்பின்மை-தமிழ் உணர்வு-கார்ப்ரேட் எதிர்ப்பு போன்ற புளித்துப்போன விஷயங்களை மையமாக கொண்ட படங்கள், அருவருப்பான ஆபாசமான காட்சிகளை கொண்ட படங்கள், இப்படித்தான் இருக்கின்றன. ஆனால் நடிகையர் திலகம் முழுக்க முழுக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பையும் திறமையையும் மட்டுமே நம்பி வெளிவந்திருக்கும் படம்.

ஆங்கிலத்தில் period film என்று கூறுவார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம். அந்த காலகட்டத்திலேயே வாழ்வது போல ரசிகர்களை உணர வைக்கும் படமே வெற்றிப்படமாக அமையும்.  நடிகையர் திலகத்தை பொறுத்த வரையில், கலை இயக்குனர் சிவம் ராவ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார், அதோடு தன் முயற்சியில் பெரிய அளவு வெற்றியும் பெற்று விட்டார். 1950-களில் ராஜேந்திர பிரசாத் மற்றும் கீர்த்தி சுரேஷ் மெட்ராஸ் வந்து இறங்கும் காட்சி கலை இயக்குனரின் உழைப்பை உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது. டிராம், ரிக்க்ஷா மிக முக்கியமாக, ரோட்டோரத்தில் புத்தகங்கள் விற்பவர் என்று மிக அழகாக காட்சி படுத்தியிருப்பார்கள். 80-90-களில் பிரபலமாக இருந்த Gold Spot குளிர்பானமும் ஒரு காட்சியில் இடம் பெறுகிறது. இவ்வாறு அந்த காலகட்டத்தை படம் அழகாக காட்டி வெற்றி பெறுகிறது. 

Advertisement

நடிகையர் திலகத்தை பொறுத்த வரையில் மிகப்பெரிய பலமே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட நடிகர் மற்றும் நடிகைகளே. நாகேஸ்வர ராவாக அவரது பேரன் நாகசைதன்யா, எஸ்.வி.ரங்காராவாக மோகன் பாபு, என ஒன்றிரண்டு காட்சிகளே தோன்றும் கதாபாத்திரங்களுக்கு கூட மிக கவனமாக நடிகர்களை தேர்வு செய்திருப்பது, இயக்குனர் நாக் அஷ்வின் அவர்களின் உழைப்பை காட்டுகிறது. ஒன்றிரண்டு காட்சிகளுக்கு வரும் கதாபாத்திரங்களுக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பவர் கதாநாயகி மற்றும் கதாநாயகன் பாத்திரங்களுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மானை தேர்வு செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்களில் நாம் அன்றாடம் பார்க்கும் அடுத்த வீட்டு பெண் போல சுட்டியாக திரிந்து கொண்டிருந்தார். தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் சாவித்திரியாக வாழ்ந்திருக்கிறார். பொதுவாகவே ஒரு பிரபலமான நடிகையின் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம். நிச்சயம் இவர் இப்படி, அவர் அப்படி என்று ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் கீர்த்தியை பொறுத்த வரை அப்படி ஒப்பிட்டு பார்த்தாலும் எந்த வேறுபாடும் தெரியாது. அது தேவதாசுவாக இருக்கட்டும் மிஸ்ஸியம்மாவாக இருக்கட்டும் அல்லது பாசமலாராக இருக்கட்டும், சாவித்திரி தான் தெரிகிறார். இதை விட சிறப்பாக ஒருவர் நடித்து விட முடியுமா என்றால், நிச்சயம் முடியாது என்பதே நம் கருத்து.

எப்படி கீர்த்தி, சாவித்திரியை நினைவுபடுத்துகிறாரோ அதே போல துல்கர் ஜெமினியை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவரது நடை, உடை, பாவனை, கண் அசைவு, சிரிப்பு என அனைத்திலுமே கவனம் செலுத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் சாவித்திரியின் அபாரமான வளர்ச்சியினால் பொறாமை கொள்கிறார். நிஜத்தில், எம்.ஜி.ஆர்-சிவாஜி-க்கு மாற்று இல்லை என்றிருந்த காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் ஜெமினி கணேசன். ஆனால் இது சாவித்திரியை பற்றிய படம் என்பதால் அவற்றை எல்லாம் காட்டவில்லை போல.

எந்த அளவுக்கு கலை இயக்குனர் 1950, 60, 80-களை கண் முன் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறாரோ, அதே அளவுக்கு ஒப்பனையாளர்களும் உழைத்திருக்கிறார்கள். துல்கரும், கீர்த்தியும் டென்னிஸ் விளையாடும் காட்சிகளை பார்த்தால் ஜெமினி சாவித்திரி டென்னிஸ் விளையாடுவது அப்படியே கண் முன் வந்து செல்கிறது.

மாயா பஜார் படத்தில் எஸ்.வி.ரங்காராவ் போலவே சாவித்திரியும் நடித்திருப்பார். அந்த காட்சி இந்த படத்தில் இடம் பெறுகிறது. இங்கே எஸ்.வி.ரங்காராவாக மோகன்பாபு நடித்திருக்கிறார். அப்படியே ரங்கராவாக தெரிகிறார். ஒப்பனை கலைஞர்களின் திறமை எந்த அளவிற்கு கை கொடுத்திருக்கிறது என்பது இந்த காட்சியை பார்த்தாலே தெரியும். சாவித்திரி எப்படி நடித்திருப்பாரோ அப்படியே கீர்த்தியும் நடித்திருப்பார். இப்படி நடிக்க அபார திறமை வேண்டும். நம்மை பொறுத்த வரையில், இந்த படத்தின் மிகச் சிறந்த காட்சி இது தான். இந்த இடத்தில் ஒரு வசனமும் இடம் பெரும். கடோத்கஜானாக நடிக்கும் எஸ்.வி.ரங்காராவ் ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ பாடலை பாடி விட்டு வந்த பிறகு, பிரகாஷ் ராஜ் கேட்பார், ‘என்னய்யா 100 நாள் ஓடுற மாதிரி பாட்டு எழுத சொன்னா, 100 வருஷம் வாழற மாதிரி எழுதி இருக்க’ என்று. இதில் மாற்று கருத்தே இருக்க முடியாது. அது சாகா வரம் பெற்ற பாடல் தான். அப்படி பட்ட ஒரு காட்சியை மீண்டும் அழகாக படமாக்கியிருப்பது இயக்குனரின் அசாத்திய திறமையை காட்டுகிறது.

சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஸ்டார் value என்று சொல்லப்படும் நட்சத்திர அந்தஸ்த்துக்காக மட்டுமே இவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள் போல. இவர்கள் நடிப்பும் கூட சுமார் ரகம் தான்.

நடிகைகள் என்றாலே மஹாராணி போல வாழ்பவர்கள் என்ற கருத்து நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் யதார்த்தம் வேறு. பாதுகாப்பின்மை, அறியாமை போன்றவற்றால் கனிவாக பேசுபவர்களை எளிதில் நம்பி விடுவார்கள். பிற்காலத்தில் அது தவறு என்றும் உணர்கிறார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்றொரு பழமொழி உண்டு. இதுவும் கூட அப்படித்தான். ஒரு காட்சியில், வாய்ப்பு தேடி வரும் ஒரு பெண்ணை ஒரு முதியவர் கண்டபடி தொட முயல்வார், கீர்த்தி அவரை சரமாரியாக போட்டு அடிப்பார்.

வருமான வரித்துறையினர் சாவித்திரியின் வீட்டை சோதனையிடும் காட்சியில் பணம் மற்றும் நகைகளை எல்லாம் பறிமுதல் செய்துவிடுவார்கள். பிறகு நிறைய இடத்தில் கையெழுத்திடுமாறும் கேட்பார்கள். கையெழுத்து போட்ட பிறகு ஒரு அதிகாரி கேட்பார் ‘மேடம், எங்க குடும்பத்துல எல்லாருமே உங்க ரசிகர்கள் தான். உங்க ஆட்டோகிராப் போட்டு கொடுங்களேன்’ என்று. விரக்தியான புன்னகையுடன் கீர்த்தியும் ஆட்டோகிராப் போட்டு கொடுப்பார்.

ரசிகனை பொறுத்த வரையில், எந்த நிலையிலும் நட்சத்திரங்கள் நட்சத்திரங்கள் தான்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை அதை விட அருமை. பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டிருக்கும் மஹாநதி பாடலுக்கு இவர் இசையால் உயிர் கொடுத்திருக்கிறார். பழைய பாடல்களை அப்படியே பயன்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயம். ரீமிக்ஸ் என்ற பெயரில் சாகாவரம் பெற்ற பாடல்களை பாழடிக்காமல் அப்படியே பயன்படுத்தியிருப்பதும் அதற்கேற்ற காட்சிகளை கருப்பு வெள்ளையில் அமைத்திருப்பதும் அழகு. வாராயோ வெண்ணிலாவே மற்றும் மலர்ந்தும் மலராத பாடல்களுக்கு திரையரங்கில் பலத்த வரவேற்பு.

நடிகையர் திலகம் நேரடி தமிழ் படம் இல்லை, தெலுங்கு படம் தான் (மஹாநதி). தமிழில் டப்பிங் செய்து தான் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் நேரடி தமிழ் படங்களை விடவும், இது பல மடங்கு சிறந்த படம் என்று தான் கூற வேண்டும். நடிகையர் திலகம் ஒரு காவியம் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வேளை, சாவித்திரி அவர்களே கூட, இந்த திரைப்படத்தை பார்த்தால் இதை விட சிறப்பாக எடுக்க முடியாது என்று தான் கூறுவார். இது நிச்சயம் திரையரங்குகளில் பார்க்கப்பட வேண்டிய படம் என்பது தான் நம் பரிந்துரை.

கதிர் மதிப்பெண் – 4.5/5

Share